சுதந்திர நாடு என்ற ரீதியில் இலங்கை எந்தவொரு நாட்டுக்கும் எதிரி நாடு அல்ல என அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஷ் பத்திரண (Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.
அதேவேளை எந்த நாட்டுடனும் இராஜதந்திர ரீதியிலான உடன்படிக்கைகளில் கைச்சாத்திடும் வல்லமை இலங்கைக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,
சீனாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தமானது, சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அல்ல எனத் தெரிவித்த அவர், அது இருதரப்பு ஒப்பந்தம் மாத்திரமே என்று குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் இந்தியா, சீனா போன்ற நாடுகளுடன் இவ்வாறான இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், இந்த உடன்படிக்கையில் மறைக்கப்படுவதற்கு எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
அதேவேளை இலங்கைக்கு மேலும் உதவிகளை வழங்க இந்தியாவும் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








































