கேமரூனில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கேமரூனில் ஆப்பிரிக்க நாடுகளின் கிண்ணம் கால்பந்து போட்டிகள் நடந்து வருகிறது. தலைநகர் யவுண்டேவில் உள்ள ஒலெம்பே மைதானத்தில் நடைபெறும் போட்டியை காண மக்கள் முண்டியடித்த போது குறித்த சம்பவம் நடந்துள்ளது.
இதுவரை 6 பேர்கள் பலியானதாக தகவல் வெளியான நிலையில், கேமரூனின் மத்திய பிராந்தியத்தின் கவர்னர் நசெரி பால் பியா, மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதனிடையே, கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 40 பேர் காயமடைந்ததாக அருகிலுள்ள மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடம் எனவும், சிறப்பு மருத்துவமனைகளுக்கு அவர்களை உடனடியாக அனுப்ப வேண்டும் எனவும் மருத்துவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலுக்கு மத்தியிலும் விளையாட்டு தடையின்றி நடந்துள்ளது. கேமரூன் அணி 2கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு நுழைந்துள்ளது.








































