பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ச அணி எதிர்க்கட்சியில் அமரத் திட்டமிட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்தகைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் அமைப்பு சீர்குலைந்துவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு தற்போது சபையில் 40க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதாகவும், இவ்வாறான சூழ்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் தரப்பினர் அதிக ஆசனங்களைக் கொண்டிருப்பதாகவும், எனவே அவர்கள் புதிய எதிர்க்கட்சியாக மாறுவதற்கு உரிமை கோர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்சவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதோ அல்லது பசில் அணியை எதிர்க்கட்சியில் அமர வைப்பதோ இந்த நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது எனவும் ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தின் அரசியலால் மக்கள் சலிப்படைந்துள்ளதாகவும், அவர்கள் அரச பதவியை விட்டு வெளியேறி, அரசியலில் நாட்டை புதிய மாற்றத்திற்கு அனுமதிப்பது காலத்தின் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.








































