அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி பொருளாதார நெருக்கடியை வெற்றிக்கொள்ளும் இயலுமை புதிய பிரதமர் உட்பட அரசாங்கத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு ஜனநாயகத்தை பாதுகாக்கும் அவசியம் குறித்தும் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் சந்தித்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜூலி சங்க் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்ட பின்னர் சபாநாயகரை சந்தித்தது இதுவே முதல் முறை. மேலும் இலங்கை – அமெரிக்க நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை முன்னேற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் தூதுவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மேற்கொண்டு வரும் பணிகளை பாராட்டியுள்ள தூதுவர், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்த அமெரிக்க தொடர்ந்தும் வழங்கி வரும் பலம் தொடர்பில் சபாநாயகர் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டுள்ளார். இந்த சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்கவும் கலந்துக்கொண்டார்.








































