விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்திற்கு தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இதனிடையே ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவால் விஜய்யின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு தமிழ் சினிமாவில் இருந்து பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
தற்போது சென்னை அருகில் உள்ள தனியார் பொழுதுபோக்கு படப்பிடிப்பு தளத்தில் நடந்து வரும் வாரிசு படப்பிடிப்பின் போது உரிய அனுமதியின்றி யானைகளை அழைத்து வந்து பயன்படுத்தியதாக புதிய குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பின்னர் போலீசார் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது யானையை வாகனத்தில் அழைத்து வர மட்டுமே அனுமதி கடிதத்தை படக்குழு சமர்ப்பித்ததாக தெரிகிறது.
படப்பிடிப்பில் யானையை பயன்படுத்துவதற்கான அனுமதி கடிதம் எங்களிடம் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்ததாகவும், ஆனால் அந்த கடிதத்தை அவர்கள் தரவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே யானையை பூஜைக்கு பயன்படுத்த மட்டுமே அழைத்து வந்ததாக படக்குழு கூறியிருந்தது. இதுதொடர்பாக உரிய ஆவணங்களை விரைவில் சமர்ப்பிப்பதாகவும் படக்குழு தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.