- ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வெற்றிபெற்ற திரைப்படம் காந்தாரா.
- ரூ. 8 கோடியில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.
ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து இப்பம் உருவாகியிருந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் படத்தை பாராட்டினர்.
இந்நிலையில், காந்தாராவின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அதன் உண்மை கதாபாத்திரமான பஞ்சுருளியிடம் படக்குழு ஆசிப்பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள படக்குழு, “நீங்கள் இயற்கையிடம் சரணடைந்து, வாழ்க்கையில் இத்தகைய வெற்றியையும் சுதந்திரத்தையும் உங்களுக்கு வழங்கிய கடவுளை வணங்குங்கள். கந்தாரா படக்குழு தெய்வீகத்தை நிஜ வடிவில் தரிசனம் செய்து தெய்வத்தின் அருளைப் பெற்றனர்!” என்று பதிவிட்டுள்ளனர்.








































