அரச நிறுவனங்களின் அனைத்து கொடுப்பனவுகளும், கட்டணங்களும் அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் டிஜிட்டல் இலத்திரனியல் கொடுப்பனவு வசதிகளின் கீழ் மட்டுமே நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் இந்த ஆண்டு செப்டம்பரில் அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும், நாட்டின் டிஜிட்டல் மாற்றத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இணையப்பாதுகாப்பு சட்டம்
மேலும், இணையப் பாதுகாப்புச் சட்டம் இந்த ஆண்டுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், இந்தச் சட்டம் தேசிய தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு மூலோபாயத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்கவும், சிலரால் டிஜிட்டல் முறைகளைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், முக்கியமான டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும் தேவையான சட்டக் கட்டமைப்பை உருவாக்கவும் இது உதவும் என்று கனக ஹேரத் கூறியுள்ளார்.
இலங்கையின் புதிய இணையப்பாதுகாப்பு மூலோபாயத் திட்டம் தொடர்பாக இலங்கை கணினி அவசர பதில் மன்றமும் உலக வங்கியும் இணைந்து கொழும்பில் நடத்திய செயலமர்வில் கலந்துகொண்ட போதே கனக ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.








































