- நமது ஆளுமையை பிறரிடம் எடுத்துரைப்பது கண்கள்தான்.
- கண்களை அழகாக்க ஐ லைனர் பயன்படுத்துவார்கள்.
நமது ஆளுமையை பிறரிடம் எடுத்துரைப்பது கண்கள்தான். நம்மில் எழும் கோபம், மகிழ்ச்சி, வெறுப்பு போன்ற உணர்வுகளை கண்கள் எளிதாகப் பிறருக்கு எடுத்துக்காட்டும். சோர்ந்து, ஒளி இழந்த கண்கள் முகத்தின் அழகையும், தோற்றத்தின் பொலிவையும் குறைக்கும். எனவே கண்களின் அழகை மேம்படுத்திக்காட்டும் சில மேக்கப் முறைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
டின்ட் மாய்ஸ்சுரைசர் மற்றும் ஐ கிரீம் கலவை: கண்களைச் சுற்றிலும் வறட்சி இன்றி ஈரப்பதத்துடன் காட்சியளிக்க, மாய்ஸ்சுரைசரை ஐ கிரீமுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள், இமை முடி, இமைகள் என அனைத்து பகுதியிலும் இந்தக் கலவையை மென்மையாகத் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதனால், சோர்வடைந்த கண்கள் புத்துணர்வு பெறும்.
லைனருக்கு மாற்றாக ஷீர் ஷேடோ: கண்களை அழகாக்க ஐ லைனர் பயன்படுத்துவார்கள். இதற்குப் பதிலாக கண் இமைகள் மேல், வெளிர் பழுப்பு நிற ஷேடோவை மெலிதாகத் தடவலாம். பொடி போல் இருக்கும் இந்த ஷேடோவைத் தடவும் போது, கண்களின் இமைகள் பிரகாசமாகப் பிரதிபலிக்கும். கண்களின் தோற்றத்தை அழகாய் எடுத்துக் காட்டுவதுடன், சிறிய கண்களையும் பெரிதாக காட்டும். இதற்கு, சில நொடிகள் மட்டும் செலவிட்டாலே போதுமானது.ஐ ஷேடோவை லைனராக பயன்படுத்தும் போது, அது நாள் முழுவதும் நீடித்து நிற்கும். கிரீம்களாக இல்லாமல், தூள் வடிவில் பயன்படுத்தும்போது நீண்ட காலம் நீடிக்கும்.
புருவத்தை உயர்த்திக்காட்ட: முகத்தையும், கண்களையும் அழகாய் காட்டுவதில் முக்கிய பங்கு புருவத்திற்கு உண்டு. கண்களின் வடிவத்திற்கு ஏற்ப புருவங்களை திருத்திக் கொள்ளலாம். சிறிய கண்கள் கொண்டவர்கள் புருவத்தை நீண்ட வளைவாக அமைக்கலாம். அகலமான கண்கள் இருந்தால், புருவங்களை மெல்லியதாக வடிவமைக்கலாம்.
கருவளையத்தை நீக்குதல்: கண்களின் கீழ் இருக்கும் கருவளையத்தை மறைப்பதற்கு ‘பீச்’ டோன் கொண்ட கன்சீலரைப் பயன்படுத்தலாம். கண்களின் கீழ்ப் பகுதி, புருவத்திற்கும் கண்ணுக்கும் இடைப்பட்ட பகுதி, கண் ஓரங்களில் ஆங்கில எழுத்து ‘வி’ போன்ற அமைப்பில் தடவ வேண்டும். இதனால், கருவளையம் மறைந்து சரும நிறத்தோடு ஒத்துப்போகும்.
கறுப்பு நிற ஐ லைனரை தவிர்க்கவும்: கண்கள் சோர்வாக இருக்கும் போது, கறுப்பு நிறத்தில் ஐ லைனரைப் பயன்படுத்தினால் மேலும் சோர்வடைந்ததாகக் காட்டும். கறுப்பு நிறத்திற்கு மாற்றாக, பழுப்பு நிற ஐ லைனரை உபயோகிக்கலாம். வெண்கல அல்லது மிதமான பழுப்பு நிற ஐலைனர் அணியும்போது, கண்கள் அழகாக இருக்கும். இவை கண்களைப் பிரகாசமாக பிரதிபலிக்கும்.
ஐ லேஷஸ், மஸ்காரா: கண்களை அழகாக எடுத்துக்காட்ட ஐ லேஷஸ் உதவும். இவை நேராக இல்லாமல், வளைந்து இருக்கும்போது கண்கள் மிகவும் எடுப்பாகத் தெரியும். மஸ்காரா பலமுறை தடவினால் கண் இமை முடிகள் பெரியதாகத் தெரியும்.