பிரித்தானியாவின் பணவீக்கம் கடந்த மாதத்தில் 10 வீதத்துக்கும் கீழே சரிந்திருந்தாலும் எதிர்பார்த்தது போல பொருட்களின் விலைகள் குறையாததால் மக்கள் தொடர்ந்தும் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் 31 வருடங்களுக்குப் பின்னர் கடுமையான விலைவாசி ஏற்றம் நிலவி வரும் பின்னணியில் பணவீக்கம் சரிவடைந்தாலும் பொருட்களின் விலையேற்றத்தில் தணிவு ஏற்படாத நிலைமை அரசாங்கத்துக்கும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
பணவீக்க எச்சரிக்கை
பிரித்தானியாவில் நிலவும் உயர்ந்த பணவீக்கம் அதன் பொருளாதாரத்தில் பெரும் தாக்கங்களை உருவாக்கும் வகையில் அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளையும் கட்டணங்களையும் அதிகரித்து வருவதையடுத்து பிரித்தானியா அதிக பணவீக்கத்தால் பாதிக்கப்படலாமென நேற்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் இடம்பெற்றதைப் போல எரிசக்தி வளத்தின் விலை உயர்வுகள் இந்த ஏப்ரலில் இல்லாததால் பணவீக்க விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருந்தாலும் பொருட்களின் விலைகள் குறையாமல் தொடந்தும் அதிகரித்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிருப்தியில் அரசாங்கம்
பொருட்களின் விலைகள் கடந்த ஆண்டு இதே சமகாலத்தில்; இருந்ததை விட அதிகமாக இருப்பதால் பிரித்தானியாவில் வசிக்கும் மக்களின் வருடாந்த உணவு விலை பணவீக்கம் வரலாற்று உச்சத்துக்கு அருகே 45 ஆண்டுகளில் அதிகபட்சமாக இருந்தது.
எனினும் தற்போது பணவீக்கம் குறைவடைந்து வரும் நிலையில் பொருட்களின் விலையேற்றத்தில் தணிவு ஏற்படாமை அரசாங்கத்தையும் அதிருப்தியடைய வைத்துள்ளது.