ஆசிய கோப்பை கிரிக்கெட் 2023 தொடரில் பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் போட்டியில் நேபாளத்தை 238 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முல்தான் நகரில் நடைபெற்ற இந்த போடி்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இதில் தொடக்க வீரர் ஃபக்கர் சாமான் 14 ஓட்டங்களிலும் , இமாம் உல் ஹக் ஐந்து ஓட்டங்களிலும் ஆட்டம் இழக்க ரிஸ்வான் 44 ஓட்டங்களில் வெளியேறினார்.
சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 131 பந்துகளில் 151 ஓட்டங்கள் விளாசினார். இதில் 14 பவுண்டரிகளும், ஆறு இமாலய சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 342 ஓட்டங்கள் எடுத்தது.
சதாப்கானின் நான்கு விக்கெட்டுகள்
இதனை அடுத்து 343 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் அணி களமிறங்கியது.
ஆரிப் சேக் 26 ஓட்டங்களிலும், சோம்பால் 28 ஓட்டங்களிலும் வெளியேற ஒரு கட்டத்தில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 90 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்த நேபாள் அணி அடுத்த 14 ஓட்டங்கள் சேர்ப்பதற்குள் எஞ்சியுள்ள ஐந்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் நேபாள் அணி 23.4 ஓவரில் 104 ஓட்டங்கள் சுருண்டது. பாகிஸ்தான் தரப்பில் சதாப்கான் நான்கு விக்கெட்டுகளையும், ஷாகின் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன் மூலம் 238 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி இமாலய வெற்றி பெற்றுள்ளது.








































