இந்திய நகரம் அகமதாபாத்தில் 241 பேர்களுடன் விபத்துக்குள்ளாகி நெருப்பு கோளமான Air India விமான விபத்தின் உண்மையான காரணம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இரண்டு என்ஜின்களும்
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணையின் முதற்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம் வெளியிட்டுள்ளது.
ஜூன் 12 ஆம் திகதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா AI171 பயணிகள் விமானமானது, புறப்பட்ட 32 நொடிகளில் விபத்துக்குள்ளானது.
இதில் 241 பேர்கள் உடல் கருகி பலியாகினர். விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் அந்த விமானம் மோதியது, இந்த சம்பவத்தில் மொத்தம் 260 பேர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக இச்சம்பவம் மாறியது. இந்த நிலையில், விமான விபத்து புலனாய்வுப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானம் புறப்பட்ட சில நொடிகளில் இரண்டு என்ஜின்களும் நடுவானில் நின்று போனதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
என்ஜின்களுக்கு செல்லும் எரிபொருள் துண்டிக்கப்பட்டதே அதற்கான காரணம் என்பதும் உறுதியாகியுள்ளது. இதில் விமானி ஒருவர் ஏன் எரிபொருள் துண்டிக்கப்பட்டது என்ற கேள்விக்கு, நான் அல்ல என்பது இன்னொரு விமானியின் பதிலாக உள்ளது.
துண்டிக்கப்பட்டதன் காரணம்
இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட விமானிகள் RAT அமைப்பை செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர். முதல் என்ஜினை செயலுக்கு கொண்டுவர முயன்று, லேசாக வெற்றி கண்ட போதும், இரண்டாவது என்ஜின் செயல்படவில்லை.
வெறும் 32 நொடிகள் மட்டுமே அந்த விமானம் அந்தரத்தில் பயணித்துள்ளது. எரிபொருள் சோதனையில் கலப்படம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சதி வேலை இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
பறவைகள் குறுக்கிட்டதாகவோ, காலநிலை சிக்கல்கள் ஏற்பட்டதாகவோ ஆதாரம் இல்லை. விமானிகள் இருவரும் மருத்துவ ரீதியாக உடல் தகுதியானவர்கள், போதுமான ஓய்வுக்கு அடுத்தே பணிக்குத் திரும்பியுள்ளனர்.
அத்துடன் அந்த வகை விமானங்களை இயக்கும் அனுபவம் பெற்றவர்கள். சதி வேலை நடந்ததற்கான உடனடி ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை என்றாலும், எரிபொருள் திடீரென்று துண்டிக்கப்பட்டதன் காரணம் மர்மமாக இருப்பதாகவே கூறப்படுகிறது.








































