வட ஆபிரிக்க நாடான மொராக்கோவில் 105 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் விழுந்து நான்கு நாட்களாக சிக்கியிருந்த ஐந்து வயது சிறுவனை மீட்கும் முயற்சிகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. சிறுவனிற்காக உலகெங்கும் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.
ரேயன் என அடையாளம் காணப்பட்ட சிறுவன், செவ்வாய்கிழமை மாலை, வடக்கு மாகாணமான Chefchaouen இல் உள்ள Ighran கிராமத்தில் தனது வீட்டிற்கு வெளியே அமைந்துள்ள 32 மீட்டர் (105 அடி) ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.
மீட்புக்குழுக்கள் முதலில் ஐந்து புல்டோசர்களின் மூலம் செங்குத்தாக 31 மீட்டருக்கும் அதிகமான ஆழத்திற்கு தோண்டினர்.
நேற்று வெள்ளிக்கிழமை, அவர்கள் சிக்கிய சிறுவன் சிக்கியுள்ள இடத்தை அடைய கிடைமட்ட சுரங்கப்பாதையை தோண்டத் தொடங்கியுள்ளனர். சிறுவன் சிக்கியுள்ள ஆழ்துளை கிணற்றிற்கும், அருகில் தோண்டப்பட்டுள்ள மீட்புப் பள்ளத்திற்குமிடையில் 5 மீற்றர் இடைவெளியுள்ளது.
கிடையாக நிலத்தை அகழ்ந்து, மண்சரிவு ஏற்படாமல் குழாயை பொருத்தி, சிறுவனின் இருப்பிடத்தை அடைய வேண்டும். நேற்று வெள்ளிக்கிழமை மண்சரிவு ஏற்பட்டதால் மீட்புப்பணி சில மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கியுள்ளது.
இனி மண்சரிவு ஏற்படாவிட்டால் இன்னும் சில மணித்தியாலங்களில் சிறுவன் மீட்கப்பட்டு விடுவான் என மீட்புக்குழு அறிவித்துள்ளது.
தற்போது கயிற்றின் மூலம் சிறுவனிற்கு ஒட்சிசன் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. 18 அங்குல விட்டத்தை மட்டுமே கொண்ட ஆழ்துளை கிணறு அது.
கயிற்றின் மூலம் அனுப்பப்பட்டுள்ள கமராவின் மூலம், சிறுவன் உயிருடனிருப்பது தெரிய வந்துள்ளது.
சிறுவனை வெளியே கொண்டு வந்தவுடன், அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக ஹெலிகொப்டரை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
சிறுவனை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மொராக்கோ அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
உதவி மற்றும் மீட்புப் பணிகளைப் பார்க்க ஏராளமான மக்கள் அங்கு கூடியுள்ளனர். SaveRayan என்ற ஹேஷ்டேக் மொரொக்கோவை கடந்து உலகெங்கும் பிரபலமாகியுள்ளது.













































