இலங்கையில் தற்போது இனங்காணப்டும் கொரோனா வைரஸ் தொற்றாளர்க்களில் 95 வீதத்திற்கும் அதிகமானோர் ஒமைக்ரோன் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பதுவன்துடாவ பேசுகையில், கடந்த நான்கைந்து நாட்களில் தினசரி கோவிட் தொற்று 1,000ஐ தாண்டியுள்ளதுடன், தொற்றுநோய்களின் தெளிவான அதிகரிப்பு காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
பெரும்பான்மையானவர்கள் ஓமைக்ரோன் தொற்றாளர்கள் என்பதை மரபணு வரிசைமுறை சோதனைகள் உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார். ஒமைக்ரோன் மாறுபாடு வேகமாக பரவக்கூடியது. டெல்டா மாறுபாட்டைப் போல சிக்கல்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றார்.
வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெறக்கூடியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் கவனம் தேவைப்படுபவர்கள் என இரண்டு வகை நோயாளிகள் இருப்பதாக பணியகத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.








































