டுவிட்டர் நிறுவனத்திற்கு எதிராக 150 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
டுவிட்டர் நிறுவனத்தின் நடவடிக்கையால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த அபராதம் விதிக்கப்பட்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் டுவிட்டரை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
டுவிட்டர் தளம் மீது எழுந்துள்ள புகார்
2013ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் வரை டுவிட்டர் நிறுவனம் பயனாளிகளின் கணக்கு பாதுகாப்புக்காக அவர்களின் தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சள் முகவரிகளை சேகரித்தது.
ஆனால் பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு ஒன்லைன் விளம்பரங்களை அனுப்ப டுவிட்டர் நிறுவனம் உதவியதாக புகார் எழுந்தது.
நீதிமன்றில் வழக்கு
இதையடுத்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. டுவிட்டர் நிறுவனத்தின் இந்த நடைமுறையால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். அதே வேளையில் டுவிட்டரின் முதன்மை வருவாய் அதிகரித்தது என்று பெடரல் டிரேட் கமிஷன் தலைவர் லினா காக் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த புகாரில் 150 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் பயனாளிகளின் தரவுகளை பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் பெடரல் டிரேட் கமிஷன் தெரிவித்துள்ளது.
கமிஷனின் இந்த கோரிக்கையை கூட்டாட்சி நீதிமன்றம் அங்கீகரிக்க வேண்டும். அப்படி அங்கீகரித்தால் டுவிட்டர் நிறுவனம் 150 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் செலுத்த வேண்டிவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.








































