- மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது வீரர், வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர்.
- இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க 7 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஷ் பூஷன் ஷரண் சிங் மற்றும் பயிற்சியாளர்கள் மீது மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்டமைப்பின் தலைவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு 7 பேர் கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. இந்த குழுவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், வில்வித்தை வீராங்கனை டோலா பானர்ஜி, பளுதூக்குதல் கூட்டமைப்பு தலைவர் சதேவ் யாதவ், அலாக்நந்தா அசோக் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஏற்கனவே மல்யுத்த வீரர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவுக்கு கடிதம் அனுப்பினர். அதில், பல்வேறு இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருந்தனர். 4 கோரிக்கைகளையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுடன் நேற்று நள்ளிரவு விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை கைவிடுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர்.
கண்காணிப்பு குழு அமைக்கப்படும். அதற்கான பெயர்கள் நாளை அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழு 4 வாரங்களுக்குள் விசாரணையை முடித்துவிடும். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மற்றும் அதன் தலைவர் மீது சுமத்தப்பட்ட நிதி அல்லது பாலியல் துன்புறுத்தல் என அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் இது முழுமையாக விசாரிக்கும்.
விசாரணை முடியும் வரை அவர் (சிங்) ஒதுங்கி விசாரணைக்கு ஒத்துழைப்பார். மேற்பார்வைக் குழு மல்யுத்த கூட்டமைப்பின் அன்றாட விவகாரங்களை நடத்தும் என மந்திரி அனுராக் தாக்கூர் உறுதி அளித்தார்.