நடிகர் அஜய் தேவ்கன் தற்போது விகாஸ் பால் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
இப்படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படம் அஜய் தேவ்கன் நடிப்பில் ‘போலா’ என்ற தலைப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த மார்ச் 30-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதைத்தொடர்ந்து, நடிகர் அஜய் தேவ்கன் ‘குயின்’, ‘சூப்பர் 30’, ‘குட் பை’ உட்பட பல படங்களை இயக்கிய விகாஸ் பால் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
ஜூன் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, முசோரி மற்றும் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் நடக்க இருக்கிறது. அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகை ஜோதிகா கடைசியாக 1998-ஆம் ஆண்டு வெளியான ‘டோலி சாஜா கே ரக்னா’ என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். தற்போது அஜ்ய தேவ்கன் – மாதவன் நடிக்கும் இப்படத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி திரையுலகிற்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.