ஈரானில் ஒரு திரைப்பட விழாவுக்கு ஹிஜாப் அணியாமல் சென்ற அப்சஹென் பாபேகன் என்ற 61 வயதான நடிகைக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள ஓர் சட்டமாகும்.
இதனை மீறுவது குற்றச்செயலாக கருதப்படுவது மாத்திரமல்லாது அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் ஈரானில் பிரபல நடிகையான அப்சஹென் பாபேகன் என்ற 61 வயது நடிகை ஒரு திரைப்பட விழாவுக்கு ஹிஜாப் அணியாமல் சென்றுள்ளார்.
ஹிஜாப் அணியாத புகைப்படங்கள்
குல்லா அணிந்திருந்த குறித்த நடிகை தனது ஹிஜாப் அணியாத புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அத்துடன் இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறித்த நடிகை அப்சஹென் பாபேகனுக்கு 2 ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சமூக வலைதளங்களை பயன்படுத்தத் தடை
அதுமாத்திரமல்லாமல் இந்த 2 ஆண்டுகளும் அவர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தவும், நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவை தவிரவும், அவருக்கு மனநிலை சரியில்லை என்று அவரது உறவினர்கள் அளித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து வாரந்தோறும் அவருக்கு மனோதத்துவ சிகிச்சை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.








































