சென்னையில் 30 இடங்களில் குண்டுகள் வெடிக்கவுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸ் தலைமை அலுவலகத்திற்கு குறித்த எச்சரிக்கை மின்னஞ்சல் மூலமாக விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
30 நிமிடங்களில் குண்டு வெடிக்கும்
சென்னையில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் பொலிஸ் தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி மிரட்டியுள்ளார்.
குறித்த கடற்கரை பகுதிகள் மக்களின் பொழுதுபோக்கு இடமாக விளங்கி வருவதுடன், இப்பகுதியில் தினமும் ஏராளமான மக்கள் குவிந்து வருவது வழக்கமான ஒன்று.
இந்நிலையில், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உட்பட பல இடங்களில் 30 நிமிடங்களில் குண்டு வெடிக்கும் என குறித்த நபர் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு மோப்ப நாய் உதவியுடன் பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், குண்டுகள் வெடிக்கவுள்ளதாக பொலிஸார் தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபர் தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது.








































