மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டமான அதுகல்புர நுழைவாயில் இன்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தின் நீளம் 40.91 கி.மீ. களாகும்.
சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்பைக் குறைப்பதற்காக கட்டப்பட்ட இந்த நெடுஞ்சாலை நகர்ப்புறங்களைத் தவிர்த்து, வெற்றுநிலங்கள் வழியாகச் செல்லும். 4 வழிப்பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீதியின் மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான வீதி தற்போது இலங்கையின் மிக அழகிய அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மீரிகமவில் இருந்து குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவில் மீரிகம, நாகலகமுவ, தம்போக்க, குருநாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகளுடன் ஐந்து பரிமாற்றங்களை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சாலை உள்ளூர் ஒப்பந்ததாரர்களால் உள்ளூர் நிதியில் ரூ.137 பில்லியன் செலவில் அமைக்கப்பட்டது.
நான்கு வழிகளைக் கொண்ட கொழும்பு-கண்டி மத்திய அதிவேக நெடுஞ்சாலை நான்கு பிரிவுகளின் கீழ் பூர்த்தி செய்யப்படுகிறது.
முதல் கட்டத்தில் கடவத்தை முதல் மீரிகம வரை 37.09 கிலோமீற்றர், மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான இரண்டாவது கட்டத்தில் 40.91 கிலோமீற்றர், அணுகல் பாதை 9.7 கிலோமீற்றர் அம்பேபுஸ்ஸ வரை செல்கிறது, மூன்றாவது கட்டத்தில் குருநாகல், பொத்துஹெர முதல் கலகெதர வரையிலான 32.50 கி.மீ. மற்றும் நான்காவது கட்டத்தில் குருநாகலில் இருந்து தம்புள்ளை வரை 60.30 கி.மீ என்ற அடிப்படையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.








































