எரிவாயு கசிவு வெடிப்புகள் பதிவாகும் நிலைக்கு நாட்டை கொண்டு வந்ததற்கு பொறுப்பான அனைவரும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாச, அரசாங்கம் ஒருபோதும் பொதுமக்களின் சார்பாக செயற்படாது என்றார்.
எரிவாயு சிலிண்டர்கள் கடுமையான தர சோதனைக்கு உட்படுத்தப்படாமை, குறுக்குவழிகளை பயன்படுத்தி இலாபம் ஈட்ட முயற்சிகள், அதிகாரிகளின் கவனக்குறைவு மற்றும் திறமையின்மை மற்றும் அமைச்சர்களின் இயலாமை போன்ற காரணங்களால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கவலைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், பெரும்பாலான அரசாங்க உறுப்பினர்கள் இந்த விடயத்தை சாதாரணமாக கருதுவதாகவும் தெரிவித்தார்.
இது போன்ற சம்பவங்கள் சாதாரண நிகழ்வுதான் என்பதே அரசாங்கத்தின் ஆரம்பப் பதில் என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், நாளுக்கு நாள் சம்பவங்கள் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்படுகின்ற போது அமைச்சர்கள் வாயடைத்துப் போனதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
மேலும், எரிவாயு தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் தரமற்ற எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விடுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
நியாயமான இழப்பீடு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு, ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.








































