உரம் தொடர்பான முடிவை திரும்பப் பெறாவிட்டால், கடுமையான விளைவுகளை அரசாங்கம் சந்திக்க நேரிடும் என அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பத்திரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த முடிவை மாற்றுவதற்கு வெட்கப்பட வேண்டியதில்லை என கூறினார்.
விவசாய சமூகத்தின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து இரண்டு சட்டமூலங்களை இந்தியப் பிரதமர், எப்படிக் கைவிட்டார் என்பதைச் சுட்டிக்காட்டியே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இருப்பினும் இயற்கை விவசாயத்திற்கான தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்திய அமைச்சர், வணிக நோக்கத்துக்கான விவசாயத்தை பாழாக்குவதை அனுமதிக்க முடியாது என கூறினார்.
ஆகவே அரசாங்கம் இதற்கான நடவடிக்கையை எடுத்தால் அடுத்த மூன்று வருடங்களுக்குள் நிலைமையை ஸ்திரப்படுத்தி மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும் என கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவசாயச் செயலாளர் உதித் ஜயசிங்க பாரிய உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என எச்சரித்தார்.
இதனை அடுத்து அரசாங்கத்தின் உரம் மற்றும் விவசாய கொள்கையை விமர்சித்த முதல் அமைச்சர், இவர் என்பது குறிப்பிடத்தக்கது.








































