சுங்கத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்களை துரிதமாக விடுவிக்க அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான குழுவொன்றை நியமிக்கவும், அரச தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சுங்கத்தில் உள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பது தொடர்பிலான விசேட கூட்டமொன்று, அரச தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
எதிர்வரும் உற்சவக் காலத்தின் போது, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி பொதுமக்கள் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று எடுத்துரைத்தார்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைச் சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் முறையான பொறிமுறையொன்று உடனடியாகத் தயாரிக்கப்பட வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
தெரிவு செய்யப்பட்ட சில அத்தியாவசியப் பொருட்களின் கொள்வனவுக்குச் சந்தர்ப்பம் வழங்குமாறும் இதன்போது, குறுகிய எண்ணங்களுடன் அதிகப்படியான பொருட்களை இறக்குமதி செய்வதற்கோ அல்லது பொருட்களைப் பதுக்கி வைப்பதற்கோ இடமளிக்கக் கூடாது என்றும் அரச தலைவர் தெரிவித்தார்.








































