இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திட்டபோது அதனை விடுதலைப்புலிகள் எதிர்த்த காரணத்தினால் அவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர் எனவும் அவர்கள் எதிர்கொண்ட அதே சவாலை இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் எதிர்கொள்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் 17வது ஆண்டு நினைவு தினம் அக்கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (08) மாலை நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் போராடிய பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அந்த வகையிலேயே தமிழ் மக்களின் விடுதலைக்காக இறுதிவரை போராடிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவை நாங்கள் நினைவுகூருகின்றோம்.
எந்த அழுத்ததிற்கும் அடிபணியாமல் தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து துணிந்து நின்று போராடியவர்கள். இவர் போன்று பலர் இந்த மண்ணில் மடிந்திருக்கின்றார்கள். இவர்களின் துணிவும் தியாகமுமே இந்த மண்ணில் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ காரணமாகவுள்ளது.
13வது திருத்தம் தொடர்பில் பலராலும் பல்வேறு கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றது. இன்று தமிழ் இனத்தின் மீது பாரிய சதிவலை வீசப்பட்டுள்ளது. இந்த சதியை நாங்கள் முறியடிக்க வேண்டும். வடகிழக்கு மக்கள் எதனை நிராகரித்தார்களோ அதுவே தீர்வாக இன்று இந்திய தேசத்தினாலும் அவர்களின் முகவர்களினாலும் கடிதம் வரையப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை தமிழ் மக்கள் நிராகரித்துள்ளார்கள்.
அண்மையில் யாழில் நடைபெற்ற பேரணியில் தமிழ் மக்கள் எழுச்சிகொண்டு 13வது திருத்தினை நிராகரித்துள்ளார்கள். அந்த நிராகரிப்பு சர்வதேசத்தின் காதுகளுக்கு எட்டியுள்ளது. இந்திய -இலங்கை உடன்படிக்கை கொண்டுவரப்பட்டபோது அதற்கு ஆதரவளித்தவர்கள் மீண்டும் வாய் திறக்க முற்பட்டுள்ளார்கள்.
மக்கள் அதற்கு தகுந்த பதிலை வழங்கியுள்ளார்கள். அன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் எவ்வாறான சவால்களை எதிர்கொண்டார்களோ அவ்வளவு சவால்களையும் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்நோக்கியுள்ளது.
13வது திருத்தம் என்பது தமிழ் மக்களின் விடுதலைக்கான இறுதி தீர்வு அல்ல.தமிழ் மக்களின் தீர்வு என்பது இணைக்கப்பட்ட வடகிழக்கு, அவர்களின் இறைமை, சுயநிர்ணயம், தமிழ் தேசியத்தினை அங்கீகரிப்பதன் ஊடாக சமஸ்டி தீர்வு என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றோம். அதற்கு மாறான தீர்வினை நோக்கி பயணிக்க எத்தனித்தவர்கள் இன்று மக்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் வாழைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் கு.குணசேகரன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.








































