அரசாங்கத்தை துரத்தியடிக்கும் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இரத்தினபுரியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், நாட்டை மிகவும் மோசமான முறையில் நிர்வகித்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தை துரத்தியடிப்பதற்கான போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். இனிமேலும் மக்கள் அமைதியாக இருப்பது நாட்டுக்கு ஆபத்தாகும் எனக் கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“சிம்பாவே மற்றும் லெபனான் போன்ற நாடுகள் ஆரம்பத்தில் இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து பின்னர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறிச் சென்ற போது , அங்குள்ள இராணுவத்தினருக்குக் கூட வெளிநாடுகளிலிருந்து உணவை வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. எனினும் இலங்கை இன்னும் அந்த மட்டத்திற்குச் செல்லவில்லை.
சரியான தீர்மானங்களை எடுக்காவிட்டால் அந்த நாடுகளில் ஏற்பட்ட நிலைமையே இலங்கையிலும் ஏற்படும்.
இது ராஜபக்ஷ குடும்பத்தின் நாடு அல்ல. பஷில் ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவின் குடும்பத்தினர் அனைவரும் அமெரிக்காவிலேயே உள்ளனர். இவர்கள் தமது தொழிலுக்காக இங்கு தங்கியுள்ளனர்.
தற்போது எம்மிடம் காணப்படும் கைவிட முடியாத பொறுப்பு இவர்களிடமிருந்து நாட்டை மீட்பதாகும்” என்றார்.








































