அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவை மதிப்பிழக்க இடமளிக்காது நிலையான மட்டத்தில் வைத்திருந்த போது ரூபாயை மிதக்க விடுமாறு எதிர்க்கட்சிகள் கூறி வந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போது ரூபாயை மிதக்க இடமளித்துள்ள நிலையில், பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“டொலர் நெருக்கடி காரணமாகவே அனைத்து பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன. இதனை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திட்ம் செல்வது மிக சரியான நடவடிக்கை.தாமதமாகியேனும் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்தமை சிறந்த விடயம்.
அரசாங்கத்திற்குள் இருக்கும் தவறுகள், நெருக்கடிகளை அடையாளம் கண்டு, நாட்டை கட்டியெழுப்பி முன்நோக்கி கொண்டு செல்ல அரசாங்கத்திற்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கின்றது.
1977 மற்றும் 2015 ஆம் நடந்த சம்பவங்களை நினைவில் வைத்துக்கொண்டு அரசாங்கம் முடிவுகளை எடுத்தால், அது அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் நல்லதாக அமையும்.
அரசாங்கத்தை கொண்டு நடத்துவது என்பது 20க்கு 20 அல்லது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியல்ல. அது டெஸ்ட் போட்டியை போன்றது. முதல் இன்னிங்சில் காட்டிய பலவீனங்கள், குறைகளை அடையாளம் கண்டு, இரண்டாவது இன்னிங்சிஸ் பந்துகளை எதிர்கொண்டு விளையாடினால், போட்டியை வெற்றிகரமாக முடிக்க முடியும்” எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.








































