மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுன அலோசியஸுக்கு சொந்தமான டபிள்யூ. எம். மென்டிஸ் அண்ட் கோ நிறுவனத்திற்கு கலால் திணைக்களம் மீண்டும் அனுமதி பத்திரங்களை வழங்கியுள்ளது.
மெண்டிஸ் நிறுவனத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட மூன்று அனுமதி பத்திரங்களில் இரண்டு மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி குறிப்பிட்டுள்ளார்.
எஞ்சிய உரிமத்தை எதிர்காலத்தில் வழங்க முடியுமா என்பது குறித்து திணைக்களம் பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு 1.5 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வரியைச் செலுத்தத் தவறியமை காரணமாக, குறித்த நிறுவனம் வைத்திருந்த மதுபான உற்பத்தி உரிமத்தை கலால் திணைக்களம் இரத்துச் செய்தது.
இரத்து செய்யப்பட்ட உரிமம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்குள் நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்தும் ஒப்பந்தத்தின் பேரில் கலால் திணைக்களத்தால் உரிமம் மீண்டும் வழங்கப்பட்டது.
அதே உரிமம் 01 ஜூன் 2021 அன்று மீண்டும் இரத்து செய்யப்பட்டது. இந்த அனுமதிப்பத்திரங்களை மீளப் பெறுவதற்காக நேற்று கடந்த 16ஆம் திகதி சில முக்கியஸ்தர்கள் மென்டிஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் கலால் திணைக்களத்திற்கு சென்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








































