சக்கரவாகேஸ்வரர் கோவிலில் நவக்கிரகம் கிடையாது.
இறைவனே நவக்கிரக நாயகனாக அருள் ஆட்சி செய்து வருகின்றார்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள சக்கராப்பள்ளியில் பிரசித்தி பெற்ற சக்கரவாகேஸ்வரர் கோவில் உள்ளது.
ராஜ ராஜசோழனின் முப்பாட்டனால் கட்டப்பட்ட இந்த கோவில் சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலின் இணைக் கோவிலாக உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்த கோவில் இறைவனை மகாவிஷ்ணு பூஜித்து சக்கராயுதம் பெற்றதாலும், மேலும் இத்தல இறைவனை பிரம்மன் சக்கரவாகப் பறவையாக உருமாறி பூஜை செய்து சாபம் நீங்க பெற்றதால் இந்த கோவில் சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது.
சப்தமாதர்கள்
முற்காலத்தில் சக்கராப்பள்ளி மிகவும் பெரிய ஊராக இருந்து வந்துள்ளது. சக்கராப்பள்ளியை சுற்றி சப்தமாதர்கள் வழிபாடும் அதிகமாக உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்ய அன்னை ஆதிபராசக்திக்கு துணையாக நின்றவர்கள் சப்தமாதர்கள் ஆவர். அவர்களை இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிகமாக வழிபட்டு வந்தனர்.
அரியநாச்சி, அழகு நாச்சியம்மன் என்ற பெயர்களில் சக்கராப்பள்ளியை சுற்றி பல ஊர்களில் சப்த மாதர்கள் கோவில் கொண்டுள்ளனர். பிரம்மனின் சக்தியாக பிராம்மி, மகேசனின் சக்தியாகிய மகேஸ்வரி, முருகனின் சக்தியாக கவுமாரி, மகாவிஷ்ணுவின் சக்தியாக வைஷ்ணவி, வராகரின் சக்தியாக வராகி, இந்திரனின் சக்தியாக இந்திராணி, துர்க்கையின் சக்தியாக சாமுண்டி ஆகியோர் சப்தமாதர் ஆவர்.
எம பயம் போக்கும் தலம்
இந்த சப்த மாதர்களில் பிரம்மனின் சக்தியாகிய பிராம்மி இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்துள்ளார். இத்தல இறைவன் எமனை சாடியதால் இவர் எமபயம் போக்க வல்லவர் என்றும் அதற்கு சாட்சியாக தேவநாயகி சன்னதி எதிரில் பெண்களுக்கு மாங்கல்ய பலன் அருள்வதும் எம பயம் நீக்க வல்லதுமான குங்குலியக் குண்டம் அமைந்துள்ளது. இத்தல இறைவி தன்னை துதிக்கும் பக்தர்களுக்கு அருள்வதற்காக ஒரு காலை முன்பு எடுத்து வைத்த நிலையில் அருள் புரிகிறாள்.
சக்கரவாகேஸ்வரர் கோவிலில் உள்ள தெட்சிணாமூர்த்தி சன்னதி வேறு எங்கும் காண இயலாத சிற்ப அழகுடன் 5 தலை நாகம் குடைபிடிக்க ஆலமரத்தின் கீழே அமர்ந்து தன்னை நாடும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது போன்ற தோற்றத்துடன் உள்ளது. சக்கரவாகேஸ்வரர் கோவிலில் நவக்கிரகம் கிடையாது. இறைவனே நவக்கிரக நாயகனாக அருள் ஆட்சி செய்து வருகின்றார். ஆதிகாலத்தில் இந்த கோவிலில் பங்குனி உத்திரம் உற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது.
முக்தி அளித்தார்
பின்னர் காசியிலிருந்து வந்த அநவித்யநாத சர்மா – அனுக்ஞை தம்பதியினர் ராமேசுவரம் செல்லும் வழியில் இத் தலத்தில் தங்கினர். அப்போது இரவில் இவர்கள் கனவில் இறைவன் எழுந்தருளி சப்த மாதர்கள் வழிபட்ட சப்தஸ்தலங்களான ஹரிமங்கை, சூலமங்கை, நந்தி மங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை என்னும் சப்ததலங்களுக்கு கண்ணாடிப் பல்லக்கில் சக்கரவாகேஸ்வரரும், தேவநாயகியும் புறப்பாடு செய்ய கூறினார். இதன்படி பங்குனி உத்திரம் முடிந்த பின் வரும் சித்திரை நட்சத்திரத்தில் கிளம்பி, சுவாதி நட்சத்திரத்தில் மீண்டும் கோவிலில் இறைவனை எழுந்தருள செய்ததால் அநவித்யநாத சர்மா தம்பதிக்கு இறைவன் முக்தி அளித்தார்.
பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி
தற்போது பிரமாண்ட கண்ணாடி பல்லக்கில் சாமி ஏழூர் பல்லக்கு புறப்பாடு ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஏழூர் பல்லக்கின் 2-ம் நாளில் அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகே அழகுநாச்சியம்மன் கோவில் முன்பு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்வது வழக்கம். மேலும் இந்த விழா தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய கோவில் விழாக்களில் ஒரு விழாவாக உள்ளது.
சப்தமாதர்கள் சப்ததலங்களில் தனித்தனியே சிவனை வழிபட்டு பெருநிலை பெற்றனர். சிவனை வழிபட்டு 7 விதமான தரிசனம் பெற்றனர். இது பற்றி அறிந்த பார்வதிதேவி இந்த 7 தலங்களில் சிவனை வழிபட்டு 7 விதமான தரிசனம் பெற்றார்.
குடமுழுக்கு
சக்கராப்பள்ளியில் சிவநேத்திர தரிசனமும், அரியமங்கையில் கங்கா தரிசனமும், சூலமங்கையில் திரிசூல தரிசனமும், நந்தி மங்கையில் திருக்கழல் தரிசனமும், பசு மங்கையில் உடுக்கை தரிசனமும், தாழமங்கையில் நாக தரிசனமும், புள்ளமங்கையில் ஆலகால விஷத்தை இறைவன் அமுதமாக மாற்றிய காட்சி தரிசனமும் பார்வதி தேவிக்கு கிடைத்தது. இத்தல இறைவனை சக்கரவாக பறவை வழிபடும் புடைப்பு சிற்பமும், சோழ அரசி செம்பியன் மாதவி வழிபடுவது போன்ற கருங்கல்லால் ஆன புடைப்பு சிற்பம் இந்த கோவிலில் உள்ளது. பங்குனி உத்திரம் பின்வரும் சித்திரை நட்சத்திர தினத்தன்று இறைவன், இறைவி மங்கள வாத்தியம் முழங்க கண்ணாடி பல்லக்கில் ஏழூர் புறப்பாடு நடைபெறும் அதிகாலை நேரத்தில் கோபுர தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான மக்கள் கோவில் முன்பு கூடுகின்றனர். இதன்படி வழிபாடு செய்தால் பக்தர்களுக்கு வற்றாத செல்வமும், திருமணத்தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சக்கரவாகேஸ்வரர் கோவிலில் கடந்த 2014-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது குறிப்பிடத்தக்கது.
சாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி
சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழாவின் நிறைவாக சாமிக்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடக்கிறது. அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகே அழகு நாச்சியம்மன் கோவில் முன்பு இந்நிகழ்ச்சி நடக்கிறது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பொம்மை ஆடிய பிறகு சாமிக்கு பொம்மை பூப்போடுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான காரணம் குறித்த விவரம் வருமாறு:- ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை கண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி இறுதியில் இறைவனை தஞ்சம் அடைகிறான். எவ்வளவு ஆட்டம் ஆடினாலும் முடிவில் இறைவனிடம் தான் தஞ்சமடைய வேண்டும் என்பதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இந்த பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
வழக்குகளில் வெற்றி அளிக்கும் சக்கரவாகேஸ்வரர்
*சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரரை வழிபட்டால் எமபயம் நீ்ங்கி மாங்கல்ய பலன், குழந்தை பேறு கிடைக்கும்.
*இக்கோவிலில் நடக்கும் சப்தஸ்தான விழா தொடக்க நாளில் அதிகாலை கோபுர தரிசனம் செய்தால் நிலம், வீடு சம்பந்தமான பிரச்சினைகள் தீர்ந்து வழக்குகளில் வெற்றி, அரசு வேலை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோவில் அமைவிடம்
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் தஞ்சை – கும்பகோணம் சாலையில் தஞ்சையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், அய்யம்பேட்டையிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அய்யம்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் பாபநாசம் ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 12 கி.மீட்டர் தொலைவில் உள்ள சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலை பஸ் அல்லது ஆட்டோ மூலம் அடையலாம்.








































