- சக்கரவாகேஸ்வரர் கோவிலில் நவக்கிரகம் கிடையாது.
- இறைவனே நவக்கிரக நாயகனாக அருள் ஆட்சி செய்து வருகின்றார்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள சக்கராப்பள்ளியில் பிரசித்தி பெற்ற சக்கரவாகேஸ்வரர் கோவில் உள்ளது.
ராஜ ராஜசோழனின் முப்பாட்டனால் கட்டப்பட்ட இந்த கோவில் சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலின் இணைக் கோவிலாக உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்த கோவில் இறைவனை மகாவிஷ்ணு பூஜித்து சக்கராயுதம் பெற்றதாலும், மேலும் இத்தல இறைவனை பிரம்மன் சக்கரவாகப் பறவையாக உருமாறி பூஜை செய்து சாபம் நீங்க பெற்றதால் இந்த கோவில் சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது.
சப்த மாதர்களில் பிரம்மனின் சக்தியாகிய பிராம்மி இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்துள்ளார். இத்தல இறைவன் எமனை சாடியதால் இவர் எமபயம் போக்க வல்லவர் என்றும் அதற்கு சாட்சியாக தேவநாயகி சன்னதி எதிரில் பெண்களுக்கு மாங்கல்ய பலன் அருள்வதும் எம பயம் நீக்க வல்லதுமான குங்குலியக் குண்டம் அமைந்துள்ளது. இத்தல இறைவி தன்னை துதிக்கும் பக்தர்களுக்கு அருள்வதற்காக ஒரு காலை முன்பு எடுத்து வைத்த நிலையில் அருள் புரிகிறாள்.
இத்தல இறைவனை சக்கரவாக பறவை வழிபடும் புடைப்பு சிற்பமும், சோழ அரசி செம்பியன் மாதவி வழிபடுவது போன்ற கருங்கல்லால் ஆன புடைப்பு சிற்பம் இந்த கோவிலில் உள்ளது. பங்குனி உத்திரம் பின்வரும் சித்திரை நட்சத்திர தினத்தன்று இறைவன், இறைவி மங்கள வாத்தியம் முழங்க கண்ணாடி பல்லக்கில் ஏழூர் புறப்பாடு நடைபெறும் அதிகாலை நேரத்தில் கோபுர தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான மக்கள் கோவில் முன்பு கூடுகின்றனர். இதன்படி வழிபாடு செய்தால் பக்தர்களுக்கு வற்றாத செல்வமும், திருமணத்தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரரை வழிபட்டால் எமபயம் நீ்ங்கி மாங்கல்ய பலன், குழந்தை பேறு கிடைக்கும்.
இக்கோவிலில் நடக்கும் சப்தஸ்தான விழா தொடக்க நாளில் அதிகாலை கோபுர தரிசனம் செய்தால் நிலம், வீடு சம்பந்தமான பிரச்சினைகள் தீர்ந்து வழக்குகளில் வெற்றி, அரசு வேலை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் தஞ்சை – கும்பகோணம் சாலையில் தஞ்சையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், அய்யம்பேட்டையிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அய்யம்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் பாபநாசம் ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 12 கி.மீட்டர் தொலைவில் உள்ள சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலை பஸ் அல்லது ஆட்டோ மூலம் அடையலாம்.








































