இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய ஓய்வூதிய பயன்களை மத்திய வங்கியின் இரண்டு முன்னாள் ஆளுநர்களான இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் சுனில் மென்டிஸ் ஆகியோர் நிராகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஓய்வூதிய நிலுவை
எனினும் கப்ராலுக்கு 2006ஆம் ஆண்டு ஜூலை முதல் 2015ஆம் ஆண்டு ஜனவரி வரை ஆளுநராக இருந்த காலத்துக்கான ஓய்வூதிய நிலுவை செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 2021 செப்டெம்பர் முதல் ஏப்ரல் 2022 வரை அவர் பணியாற்றிய வெறும் ஆறரை மாதங்களுக்கு கணிசமான உயர் சம்பளத்தில் கணக்கிடப்பட்ட பலனையும் இப்போது அவர் பெறுகிறார் என கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரின் வற்புறுத்தலுக்குப் பின்னர், கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் திகதி மத்திய வங்கியின் நாணய சபை, எந்தவொரு மத்திய வங்கி ஆளுநருக்கும் அவரது சம்பளத்தில் 74 சதவீதத்தை வாழ்க்கைச் செலவு மற்றும் நிலையான கொடுப்பனவுகளுடன் ஓய்வூதியமாக வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவருகிறது.
பி.பி.ஜெயசுந்தரவின் அறிவுறுத்தல்
அதுவும் சேவையின் கால அளவைப் பொருட்படுத்தாமல் இது செலுத்தப்படும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயலாளராக இருந்த பி.பி.ஜெயசுந்தரவின் அறிவுறுத்தலின்படி, நாணயசபை செயல்பட்டது.
எவ்வாறாயினும், நாணயசபை அத்தகைய நடவடிக்கையை எடுக்க முடியாது என்ற நிலையில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய இதனை அங்கீகரித்தாரா என்பது தெரியவில்லை.
கப்ராலின் யோசனைப்படி, 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு பதவியில் இருந்த ஆளுநர்கள் புதிய நடைமுறையின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்கள்.
இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் சுனில் மென்டிஸ் ஆகியோர் அடங்குகின்றனர். எனினும் 2015 ஜனவரி முதல் 2016 ஜூன் வரை அப்பதவியை வகித்த அர்ஜுன மகேந்திரன், குற்றவியல் விசாரணைகள் காரணமாக அந்த பலனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மத்திய வங்கி தனது ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை 1965இல் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது. எனினும் 1998இல், அந்த ஆண்டு ஜனவரிக்கு பிறகு நியமிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஆளுநர்களின் ஓய்வூதிய பலன்கள் அகற்றப்பட்டுள்ளன.
2015 ஜனவரியில் அவை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால் மத்திய வங்கியின் அப்போதைய ஆளுனர் மகேந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க ஆளுநர்கள், அதில் உள்ளடக்கப்படவில்லை என கூறப்படுகிறது.








































