இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு நடவடிக்கையில் இடம்பெறும் சந்தேகத்திற்குரிய செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த கடிதம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருள் கொள்வனவு தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் அல்லது வேறு தரப்பினரால் தொழில்சார் தகுதியுடையவர்களின் உதவியுடன் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது பொலிஸ் திணைக்களத்தால் நடத்த முடியாத தொழில்நுட்ப விசாரணை எனவும் மேற்படி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தரப்பினரின் கைகளுக்குச் செல்லும் டொலர்
இலங்கைக்கு ரஷ்ய கச்சா எண்ணெயை வழங்குவதில் பிரென்ட் சுட்டெண் இருப்பதால், பெரும் தொகையான டொலர்கள் மூன்றாம் தரப்பினரின் கைகளுக்குச் செல்கிறது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலை காரணமாக ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 46 ரூபா முதல் 69 ரூபா வரை கூடுதல் விலையை வாடிக்கையாளர் செலுத்த வேண்டியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பப்பட்ட கடிதம் தரவுகளுடன் விரிவாக முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.








































