ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைத்துள்ள முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இன்று பிற்பகல் புதிய பதவி கிடைக்கும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ரஞ்சனுக்கு வழங்கப்படும் புதிய பதவி தொடர்பில் மாலை தகவல்
விடுதலையாகி வரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்படும் புதிய பதவி தொடர்பாக இன்று மாலை மேலதிக தகவல்களை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பிரல் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்கும் ஆவணங்களில் ஜனாதிபதி சார்பில் அவரது செயலாளர் இன்று காலை கையெழுத்திட்டார். ஓரிரு நாட்களில் எமது நண்பர் ரஞ்சன் விடுதலை செய்யப்படுவார் என நாங்கள் கூறினோம்.
ரஞ்சன் ராமநாயக்க தற்போது சட்ட ரீதியாக விடுதலை செய்யப்பட்டு விட்டார். அவரின் விடுதலையான ஆவணங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
விடுதலையாகி வரும் அவருக்கு புதிய நியமனத்தை வழங்கவும் நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். அது குறித்து மாலை அறிவிக்கின்றோம் எனவும் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ரஞ்சனின் விடுதலைக்காக முக்கிய பங்காற்றிய ஹரின் மற்றும் மனுஷ
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ரஞ்சன் ராமநாயக்கவை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யும் நடவடிக்கைகளில் அமைச்சர்கள் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








































