நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி, நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தெளிவான பாதையையும் திசையையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வகுத்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொள்கை விடயங்களில் எவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் புதிய வரவு செலவுத்திட்டத்தில் ஏற்றுமதியை அதிகரிப்பது, சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான விடயங்களுக்கு ஆதரவை வழங்கலாம் என்றார்.
எனவே மக்களின் இன்னல்களைப் போக்கும் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றம் ஜனாதிபதிக்கு பங்களிப்பை வழங்க வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.








































