நடிகை ரிச்சா சதாவின் பதிவு வருத்தமளிப்பதாக அக்ஷய் குமார் தெரிவித்திருந்தார்.
தற்போது அக்ஷய் குமாரை விமர்சித்து பிரகாஷ் ராஜ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பாலிவுட்டில் ராம் லீலா, சாக் அண்ட் டஸ்டர், மசான் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிச்சா சதா. இவர் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்த இந்திய ராணுவ வீரரின் பதிவிற்கு “கல்வான் ஹாய் சொல்கிறது (Galwaan says hi)” என கமெண்ட் செய்திருந்தார்.
இந்த கமெண்ட் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து ரிச்சா சதாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்ததையடுத்து தனது பதிவிற்கு வருத்தம் தெரிவித்து ரிச்சா சதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதனிடையே நடிகர் அக்ஷய் குமார், ரிச்சா சதாவின் “கல்வான் ஹாய் சொல்கிறது (Galwaan says hi)” என்ற பதிவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து “இதைப் பார்க்கையில் வருத்தமளிக்கிறது. நமது ஆயுதப்படைகளுக்கு நன்றியின்றி இருக்கக் கூடாது. அவர்கள் இருப்பதால்தான் நாம் இன்று இருக்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ், “உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை அக்ஷய் குமார். உங்களை விட நடிகை ரிச்சா சதா சொன்னது நம் நாட்டுக்கு பொருத்தமாக இருக்கிறது” என அக்ஷய் குமாரை விமர்சித்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.