பிரபல கிரிப்டோகரன்சி விற்பனரும், கோடிஸ்வர முதலீட்டாளருமான டிம் டிரேப்பர் தனது அண்மைய இலங்கை பயணத்தின் போது எதிர்பாராத எதிர்ப்பை எதிர்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
‘மீட் தி டிராப்பர்ஸ்’ என்று தமது தொலைக்காட்சி நிகழ்ச்சியை இலங்கையில் ஒளிப்பதிவு செய்வதற்கும் பிட்கொயின் விடயத்தை இலங்கையில் ஊக்குவிக்கும் வகையிலும் அவரின் பயணம் அமைந்திருந்தது.
எவ்வாறாயினும், நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோரின் 30 நிமிட சந்திப்பில் அவரது முன்மொழிவு நல்ல வரவேற்பைப் பெறவில்லை, இலங்கை மத்திய வங்கியில் நடந்த சந்திப்பின் போது அவரது யோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் கிரிப்டோகரன்சி
ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடனான சந்திப்பின் போது டிராப்பர், கிரிப்டோகரன்சியை இலங்கையில் ஊக்குவிக்கும் தனது முயற்சிகள் தொடர்பில் வாதங்களை முன்வைத்துள்ளார்.
தற்போதைய நிதி நெருக்கடி நிலைமையில் இலங்கைக்கு, இது ஒரு தனித்துவமான வாய்ப்பாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரிவர்த்தனைகளின் துல்லியமான பதிவைப் பராமரிப்பதன் மூலம் பிட்கொயின், ஊழலைக் குறைக்க உதவும் என்று அவர் வாதிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நெருக்கடியான நேரத்தில் பிட்கொயினை அறிமுகப்படுத்துவது நிலைமையை மோசமாக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.








































