இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள், இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை அந்த நாட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தாலியில் வாழும் மற்றும் பணியாற்றும் லட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு நடைமுறைப் பிரச்சினையாக உள்ள சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த அனுமதியை வழங்குவதற்கு இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா மனெல்லா இணங்கியுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
[I69B6C ]
கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை
நீதியமைச்சர் விஜயதாச ராஜபச, இத்தாலியில் வாழும் இலங்கையர்களின் இந்த கோரிக்கையை இத்தாலிய தூதுவருக்கு முன்வைத்திருந்த நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்தாலிய தூதுவருக்கும் நீதி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பொன்று நீதியமைச்சில் நேற்று இடம்பெற்றது.
இலங்கையில் வசிக்கும் இத்தாலியர்கள் இத்தாலிய செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தின் அனுமதியை வழங்குமாறு அமைச்சரிடம் தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பரஸ்பர நட்புறவை கருத்திற்கொண்டு வெளிவிவகார அமைச்சு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் கலந்துரையாடி இந்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக நீதியமைச்சர் இத்தாலிய தூதுவருக்கு அறிவித்துள்ளார்.








































