கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கொலைகளுக்கு மூலகாரணம் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிரதேச உரிமை தொடர்பான சர்ச்சையே என குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்படும் ஹெரோயின், ஐஸ் போன்ற போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் செய்யும் தனி நபர்களே இந்த மோதல்களுக்கு முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.
மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்தமை, கடத்தல் விவகாரங்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை வழங்குதல் போன்ற சில காரணங்களே இவ்வாறான கொலைச் சம்பவங்களுக்கு பிரதான காரணம் என குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்
குறித்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களாக கருதப்படும் துபாயில் வசிக்கும் எஸ்.எஃப். ஜகத், கொஸ்கொட சுஜீ உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இந்தக் கொலைகள் அனைத்தின் பின்னணியில் இருப்பதாகத் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த வருடத்தின் கடந்த வெள்ளிக்கிழமை(23.062023) வரையிலான காலப்பகுதியில், 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், அதில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.








































