ஒன்றும் இல்லாத 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலேயே இரு நாட்டு தலைவர்களும் பேசியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
யாழ். அராலி மத்தியில் நேற்று (22.07.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
உப்பு சப்பு இல்லாத 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பிலேயே இரு நாட்டு தலைவர்களும் பேசியுள்ளார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 மைனஸ் குறித்து பேசியிருக்கிறார்.
மகிந்த 13 பிளஸ் பிளஸ் என்று கருத்து கூறி இந்திய பிரதமர் இலங்கையை விட்டு செல்லமுன்பே அவ்வாறு கூறவில்லை என தெரிவித்துள்ளார்.
தமிழருக்குள் பிளவு
அதே போல தமிழர்கள் கோரிக்கை நியாயம் என குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க இன்று பொலிஸ் அதிகாரத்தை விடுத்து பேசுகின்றார்.
இருக்கின்ற கட்சிகளையும் உடைத்து இன்னும் தமிழருக்குள் பிளவினை ஏற்படுத்துவதே ஜனாதிபதியின் நோக்கம்.
கட்சிகளை பிரிப்பதில் கைதேர்ந்தவர் ரணில் விக்ரமசிங்க விடுதலைப்புலிகளை உடைத்து கருணாவை வெளியே எடுத்தவரும் அவரே தனது வாயாலே அதனை ஒத்துக்கொண்டார்.
வழமையான அரசியல்வாதிளை விட புத்திசாலி.தமிழ் கட்சிகளை சந்திக்கும்பொழுது கடிதம் வாங்குகின்றார் ஆனால் அதனை வாசிப்பாரா என்பது கேள்விக்குறி.
பல தமிழ்கட்சிகள் இன்று வெளிப்படையாக உண்மையை பேச மறுக்கின்றார்கள். தெட்ட தெளிவாக எமக்கு தெரியும் இவர்கள் எமக்கு ஒன்றையும் வழங்போவது கிடையாது. 13 ஆவது திருத்தத்தையே இல்லாதொழிக்க பாடுபடுகின்றார்கள் என தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை
கறுப்பு ஜூலை இனக்கலவரம் அரங்கேறி 40 ஆண்டுகளாகின்ற நிலையில் அதனால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.
நீதிக்காக தமிழ் மக்கள் இன்னும் எவ்வளவு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போதைய ஜனாதிபதி ரணிலின் மாமனார் ஜே.ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இனக்கலவரம் அரங்கேற்றப்பட்ட நாள் இன்று.
இந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களின் எண்ணிக்கையோ, தென்னிலங்கையில் துவசம் செய்யப்பட்ட தமிழர்களின் சொத்துக்களின் விவரங்களோ உத்தியோகபூர்வமாகக் கணக்கெடுக்கப்படவில்லை.
இந்த நாட்டில் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் பாதுகாப்பளிக்காது என்கின்ற உண்மை உலக நாடுகளுக்கு மீண்டும் முரசறையப்பட்ட நாள்.
தனது நாட்டு மக்களைப் பாதுகாக்கவேண்டிய அரசாங்கமே அவர்களை அழிப்பதற்கு துணைபோன வரலாறு அரங்கேறிய நாள். இந்தியா உட்பட சர்வதேச சமூகம் அன்று உரிய வகையில் நீதியை நிலைநாட்டியிருந்தால் 2009ஆம் ஆண்டில் மற்றோர் கோரமான இனப்படுகொலையை தமிழினம் சந்திருக்காது.
ஒவ்வொரு நாடுகளும் தங்களது தேவைகளின் நிமித்தமே நீதியையும் மனித உரிமைகளையும் கையாள்வதால் 40 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காது தமிழர்கள் நாங்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
அரசற்ற இனமாகிய நாங்கள் எங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும் அரசியல் தீர்வை அடைவதற்கும் புதியொரு போக்கில் பயணிக்கவேண்டிய அவசியத்தையே காலம் தற்போது உணர்த்தி நிற்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.








































