ஜனவரி முதல் பயணிகளுக்கு அதிக வரி காரணமாக பயணிகளுக்கு அதிக கட்டணங்கள் விதிக்கப்படும் போது, தொடருந்து பயணத்திற்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனினும் தொடருந்துகளின் சேவைகளை அதிகரிக்க முடியாத நிலையில் உள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் கூறியள்ளது.
இந்நிலையில், இலங்கையில் தொடருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தொடருந்து சேவைகளை நீடிக்கும் திறன் தம்மிடம் இல்லை என்று தொடருந்து பொது மேலாளர் மு. பண்டார தெரிவித்துள்ளார்.
டீசல் விலை உயர்வு
இந்தநிலையில் தொடருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதை விட சேவைகளின் செயல்திறனில் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து கட்டணத்தை விட தொடருந்து கட்டணங்கள் மலிவாக இருப்பதால் தொடருந்துப் பயணிகளின் எண்ணிக்கை ஏற்கனவே அதிகரித்துள்ளது.
உதாரணமாக, “காலிக்கு 2,000 ரூபாய் செலவழித்து பேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் வெறும் 360 ரூபாயில் தொடருந்துப் பயணத்தை மேற்கொள்ளலாம்.
எனினும், டீசல் விலை தொடர்ந்து உயரும் பட்சத்தில், தொடருந்து கட்டணத்தையும் அதிகரிக்கவேண்டிய அவசியம் ஏற்படும்” என பண்டார குறிப்பிட்டுள்ளார்.
தொடருந்து திணைக்களத்தின் தற்போதைய வருமானம் டீசல் செலவை ஈடுகட்ட மட்டுமே போதுமானது. தொடருந்துகளை இயக்குவதற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 100,000 லிட்டர் டீசல் தேவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே பயணக்கட்டணங்கள் மற்றும் பருவச்சீட்டுக்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக பொது மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.








































