விளையாட்டிலிருந்து அரசியலை முற்றாக நீக்கி, சகல விளையாட்டுகளையும் ஒலிம்பிக் போட்டிகளின் இலக்கை நோக்கி கொண்டு செல்லும் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் 2025 ஜனவரி முதல் வாரத்தில் இத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் எனவும், இதனால் 2028 ஆம் ஆண்டை ஒரு ஒலிம்பிக் வருடமாக எதிர்பார்க்கலாம் எனவும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் திங்கட்கிழமை (09) தெரிவித்தார்.
தேசிய வில்வித்தை சம்பியன்ஷிப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் விளையாட்டுக்கள் தேக்கமடையாமல் விளையாட்டுக் கழகங்களில் நிலவும் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும், விளையாட்டின் மூலம் முன்னேறக்கூடிய அழகான நாட்டிற்குள் வளமான நாட்டை உருவாக்கும் தேசிய நோக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிகாட்டியுள்ளார்.
பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன மேலும் தெரிவிக்கையில்,
வில்வித்தை போன்ற எமது நாட்டின் அனைத்து விளையாட்டுகளையும் சர்வதேச வெற்றிக்கு கொண்டு செல்லும் பொறுப்பு விளையாட்டுத்துறை அமைச்சிற்கு உள்ளது எனவும், 2028 ஆம் ஆண்டை ஒலிம்பிக் நம்பிக்கைகளை கொண்ட ஆண்டாக மாற்ற வேண்டும் எனவும் அனைவரும் ஒன்றிணைந்து அதனை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.








































