இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இளம்பெண்ணொருவர் திருமணம் நடைபெற இருந்த நிலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது.
கர்நாடகாவின் கதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய்ராபானு. இவர் மைலாரி என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்துள்ளனர்.
இந்த நிலையில், உடற்கல்வி ஆசிரியரான சாய்ராபானுவிற்கு மே 8ஆம் திகதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை சாய்ராபானுவின் பெற்றோர் மேற்கொண்டு வந்துள்ளனர்.
திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க வெளியே சென்ற அவர்கள் வீடு திரும்பியபோது, தங்கள் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து சாய்ராபானுவின் சடலத்தை மீட்டனர். மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர்.
அதில் முன்னாள் காதலர் மைலாரி காதலிக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படம், வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டியதால் இந்த முடிவை எடுத்ததாக எழுதியிருக்கிறார்.
பின்னர் வழக்குப்பதிவு செய்த பொலிஸார், தலைமறைவாக இருக்கும் முன்னாள் காதலரை கைது செய்ய தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.








































