அனைத்து வகையிலும் சீரழிந்து வரும் நாட்டையே அரசாங்கம் உருவாக்கியுள்ளதாகவும், அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்து நாடு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கொள்கைப் பிரகடனம் உரை மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தனது உரையில்,
இலங்கையில் வெடிப்புகளை நிறுத்தப் போவதாக பதவிக்கு வந்த, தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் இன்று வெடிப்புக்கள் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது, வெடிப்புக்களை நிறுத்தப் போவதாக கூறியே ஆட்சிக்கு வந்தது. எனினும் இன்று நாட்டில் பல்வேறு இடங்களிலும் எரிவாயு, அரசியல், மக்கள் மற்றும் அரசாங்கத்துக்குள் வெடிப்புக்கள் நிகழ்கின்றன.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை விற்பனை செய்தே அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாக அரசாங்கம், தமது ஆட்சியில் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்திருந்தது.
எனினும் இன்று இராணுவப் பாதுகாப்பில் நாடு உரிய இலக்கை அடையவில்லை. பொரளை தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டு சம்பவம் இதற்கு ஒரு உதாரணமாகும்.
பூகோள அரசியலில் இன்று இலங்கை முக்கிய ஆதிக்க களமாக மாறியுள்ளது. இந்தநிலையில் இந்தியா, இலங்கை அரசாங்கத்துக்கு உதவியளிக்கும் போது தமது கருத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதன்போது பொதுமக்கள் லாபம் கருதி, நாட்டுக்கு கிடைக்கவேண்டிய இந்திய உதவியை தாம் தடுக்கவில்லை. ஸ்பெய்ன் நாட்டின் காளைகளை அடக்கும் போது காட்டப்படும் சிவப்பு துண்டு போகும் இடமெல்லாம், குறித்த காளை செல்வது போன்றே, இலங்கை அரசாங்கம் கொள்கைகளை கடைப்பிடிக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








































