இன்றும் நாடளாவிய ரீதியில் ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஐந்து மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணி நேரமும் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னர் அறிவித்த வலயங்களின் அடிப்படையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் டொலர் நெருக்கடி காரணமாக நாட்டில் கடந்த சில நாட்களாக நீண்ட மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எரிபொருளின்றி மின் உற்பத்தி நிலையங்கள் இயங்க முடியாத காரணத்தினால், திட்டமிட்ட மின்வெட்டுக்கு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியிருந்தது.
இதேவேளை, மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அதிகாரிகளுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது, தடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொறுப்பு வாய்ந்த தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
இதையடுத்து, சனிக்கிழமை முதல் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.








































