தற்போது அதளபாதாளத்தில் வீழ்ந்திருக்கும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப எந்தக் குழுவுக்குத் திறமை இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போது அதனை உணர்ந்துள்ள மக்கள் நாளுக்கு நாள் ஐக்கிய மக்கள் சக்தியை சுற்றி அணிதிரண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
களுத்துறை – அகலவத்தை பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
தாங்க முடியாத வாழ்க்கைச் செலவு காரணமாக நாடு அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. இந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணியையே உடனடியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இந்நாட்டு மக்கள் மாற்று முறைக்கு பதிலாக புதிய வழியைக் கொண்டு அரசியல் ரீதியாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. இதன் பிரகாரமே நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி மக்களால் தெரிவு செய்யப்பட்டது.
இந்நாட்டின் அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சியின் வகிபாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி முற்றாக மாற்றி அதற்கு புதிய அர்த்தம் கற்பித்துள்ளது.
தேசத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு அதிகாரம் இல்லாவிட்டாலும் எமது கட்சி பங்களித்துள்ளது. செயற்பட முடியாத பலவீனமான ஆட்சியை ஒரே தடவையில் வீட்டுக்கு அனுப்ப அணிதிரள வேண்டும்.
எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும் நாட்டுக்கு பெறுமதி சேர்க்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.











































