ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
அந்தவகையில் இடைக்கால வரவுசெலவு திட்டத்தின் மூலம் நாட்டின் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு உதவ நிதி கிடைக்கும் என்று கூறினார்.
உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை குறைத்து இரண்டு வருட நிவாரணத் திட்டமாக இந்த இடைக்கால வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.
நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்போது பணவீக்கம் அதிகரிக்கும் என்றும், இதனால் போராட்டங்கள் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் மாதங்களில் வருடாந்த பணவீக்கம் 40% ஐ தாண்டும் என்றும் இது ஏற்கனவே அதிக விலைகள் காரணமாக இன்னல்களை அனுபவிக்கும் குடும்பங்களுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
மார்ச் மாதத்தில் 21.5% ஆக இருந்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு 33.8% ஆக உயர்ந்துள்ளது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, புதிய நிதியமைச்சர் ஒருவர் இன்று நியமிக்கப்படுவார் என்றும் அது ரணில் விக்ரமசிங்க என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.








































