உலக சுகாதார அமைப்பும், இலங்கையின் சுகாதார அமைச்சும் இணைந்து கூட்டு வங்கிக் கணக்கு பொறிமுறை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளன.
வெளிப்படைத்தன்மை
வெளிநாட்டு நாடுகளின் உதவியை ஏற்றுக்கொள்ளும் வகையில், இது சிறந்த வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு மத்தியில் மருந்து இறக்குமதியாளர்கள் உள்நாட்டில் டொலரை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்தநிலையில் பற்றாக்குறையாக உள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்வதை துரிதப்படுத்த உலக சுகாதார அமைப்புடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி வைத்திய கலாநிதி அலகா சிங் உடன் அண்மையில் நடத்திய சந்திப்பை அடுத்து இந்த கூட்டு வங்கிக் கணக்குக்கு உலக சுகாதார அமைப்பு, 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வைப்பிலிட உடன்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளின் விருப்பம்
புதிய பொறிமுறையின் கீழ் பல வெளிநாட்டு நாடுகள் இலங்கைக்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
25 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள மருந்துகள் மற்றும் உபகரணங்களை வழங்க சீனா உறுதியளித்துள்ளது. பங்களாதேஷ் 2.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
அதே நேரத்தில் இந்தோனேசியா 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மருத்துவ உதவியாக வழங்கியுள்ளது.
ஏற்கனவே இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் 60 வீதமானவை இந்தியாவில் இருந்து எடுத்து வரப்படுகின்றன.
எனினும் இந்திய கடன் வசதியின் கீழ் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் இல்லாத காரணத்தினால் இலங்கை ரூபாவில் கடனை செலுத்துவதற்கு புதுடில்லி இணக்கம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








































