தென்னிலங்கை அரசியலில் அடுத்து வரும் வருடம் மிகவும் சவால்மிக்கதாக இருக்கும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியிலுள்ள அநுர அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்து, அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
கடந்த வருட காலப்பகுதியில் மிகவும் வேகமாக செயற்பட்ட நிலையில், நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக அது தடைப்பட்டுள்ளது.
சமகால அரசாங்கம்
நாட்டில் புரையோடியுள்ள ஊழல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை முற்றாக அகற்றுவதற்காக தீவிரமாக செயற்பட்ட சமகால அரசாங்கம் அதில் சற்று வெற்றியை பெற்றிருந்தது.
எனினும் நாடு தற்போது மீண்டும் ஸ்தம்பித்துள்ள நிலையில், நாட்டை கட்டியெழுப்ப அரசு போராடி வருகிறது.
இந்நிலையில் பலவீனமடையும் அரசாங்கத்தை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றும் தீவிர முயற்சிகளில் மகிந்த மற்றும் ரணில் தலைமையிலான கூட்டணி ஈடுபட்டு வருகிறது.
அதற்கமைய அடுத்த வருடத்தின் முதல் பாதியில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கான செயற்பாடுகள் தற்போது தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் அரசியல் நடவடிக்கையில் இருந்து விலகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் களமிறங்கியுள்ளார்.
தங்காலையில் குடிபெயர்ந்திருந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் கொழும்பில் வசிக்கும் நோக்கில் இருப்பிடத்தை மாற்றியுள்ளார்.
அரசியல் செயற்பாடு
தனது அரசியல் செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுக்கவும், வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் இலகுவான முறையில் சந்திப்புக்களை மேற்கொள்ளவும் இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளதாக அவருக்கு நெருங்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சமகால அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, அடுத்த வருடத்தின் முதல் மாதத்தில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக பிரதமர் தன்னிச்சையாக செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அண்மையில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பிலும் பிரதமர் கருத்து வெளியிட்டிருந்தார். பேரிடர் தாக்கத்தில் இருந்து மீண்டெழ இரண்டு வருடங்கள் செல்லும் என்றும் அதற்கு பல பில்லியன் ரூபா நிதி தேவை என்றும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
இது அரசாங்கத்திற்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. குறுகிய காலத்திற்குள் இலங்கை மீண்டெழும் என ஜனாதிபதி உட்பட ஆளும்தரப்பினர் தெரிவித்து வந்த நிலையில், பிரதமரின் கருத்து வெளியாகி இருந்தது.
இதனை பூதாகரமாக மாற்றி அரசியல் லாபங்களை பெற்றுக்கொளள் எதிரணி செயற்பட்டு வருகிறது. மறுபக்கத்தில் ஊழலுக்கு எதிராக செயற்பட்ட அரசாங்கத்தினால் தண்டனைக்கு உள்ளான அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் நாட்டில் குழப்பங்களை தோற்றுவித்து நெருக்கடியை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
சமகால அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டியது பல ஊழல்வாதிகள் மற்றும் பாதாள உலகக் குழுவினருக்கு மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் பல்வேறு தரப்பினர் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை தோற்றுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க முன்னின்று செயற்படவுள்ளனர்.
இதேவேளை, பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றை ஒன்றிணைக்கும் முனைப்புகளும் மறுபக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வாறான நிலை சாத்தியம் என்றால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலக தயார் என ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








































