வெளிநாட்டில் இருந்து வந்த பெண்ணொருவரின் வங்கி அட்டையை கொள்ளையிட்டு தங்க ஆபரணங்கள் உட்பட பொருட்களை கொள்வனவு செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் வசித்து வரும் பெண்ணொருவர் வவுனியா, குருமன்காடு பிரதேசத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதன்போது அவரை சந்திக்க வந்த பெண் ஒருவர், அவரது வங்கி அட்டையை கொள்ளையிட்டு, அதனை பயன்படுத்தி 13 இலட்சத்து 8 ஆயிரத்து 899 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.
இது குறித்து வன்னி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 24 சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை தீவிரம்
குறித்த பெண்ணிடம் நடத்திய விசாரணைகளை அடுத்து அவர் கொள்வனவு செய்திருந்த இரண்டு தங்க வலயல்கள்,தங்கச்சங்கிலி, இரண்டு தங்க மோதிரங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இதற்கமைய, வவுனியா பொலிஸ் நிலையத்தில் குற்ற விசாரணைப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








































