எரிபொருள் விநியோகம் முற்றிலுமாக சிதைவடைவதைத் தடுப்பதற்காக பணத்தை அச்சிடுவதற்கு மத்திய வங்கி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் எரிபொருள் கொள்வனவுக்கான டொலர்களை கொள்வனவு செய்வதற்கு போதிய ரூபா இல்லை.
பணத்தை அச்சிடும் நிலை
எரிபொருள் கொள்வனவுக்காக திறைசேரியில் இருந்து 217 பில்லியன் ரூபா கோரப்பட்ட போதும், திறைசேரியால் இவ்வளவு பெரிய தொகையை உடனடியாக வழங்க முடியவில்லை.
எனவே கோரிக்கையை நிறைவேற்ற மத்திய வங்கியின் ஒரே வழி பணத்தை அச்சிடுவதே என்றும் அவர் கூறினார்.
மத்திய வங்கி
மத்திய வங்கியின் நாணயச் சபை கடந்த வாரம் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் மற்றொரு கோரிக்கைக்கு சாதகமாக பதிலளித்தது.
இதன்படி, எரிபொருள் கொள்வனவுக்காக 185 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தால், நாட்டில் பாரதூரமான நிலைமை ஏற்பட்டிருக்கும்” என ஆளுநர் தெரிவித்துள்ளார்.








































