தென்னிலங்கை அரசியல் களம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த ஜனாதிபதியை யார் என்பது தொடர்பில் பலரும் ஆவலாக உள்ளனர்.
வலுவான ஆர்ப்பாட்டக் களம் மற்றும் ராஜதந்திர ரீதியாக காய் நகர்த்தும் ரணில் என சமாந்திரமாக பயணிக்கிறது அரசியல் களம்.
இந்நிலையில் அடுத்த ஜனாதிபதியாக ரணில் வரக் கூடாது என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதான நிலைப்பாடாகும். மறுபுறத்தில் அரசியல் கட்சிகளும் ரணிலின் எழுச்சியை விருப்பாத நிலையே காணப்படுகிறது. இதில் சஜித், அனுரகுமார திசாநாயக்க ஆகிய தரப்பினர் முன்னிலை பெறுகின்றனர்.
தென்னிலங்கை அரசியல் களம்
ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அவரின் மிகுதியான இரண்டு வருடத்தை பூர்த்தி செய்வது யார் என்பதே தற்போதைய அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது. அதற்கு ரணிலே பொருத்தமானவர் என பலரும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினாலும் அரசியல் ரீதியாக அது சாத்தியமான என்பது தற்போதைய சிக்கலாகும்.
இலங்கையில் அதாள பாதாளத்தில் வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை மீட்கவே பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். அதற்கமைய தேசிய பட்டியல் ஊடாக தெரிவான ரணில், பிரதமர், பதில் ஜனாதிபதி என பல விஸ்வரூப அவதாரங்களை பெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு ஜனாதிபதியாக செயற்படும் நிலைப்பாட்டில் ரணில் தீவிரமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கான காய்நகர்த்தல்களை தற்போது மேற்கொண்டு வருகின்றார்.
ராஜபக்சர்களின் பிளவு
இவ்வாறான நிலையில் தனது ஜனாதிபதி பதவியை தக்க வைத்துக் கொள்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையை ரணில் தற்போது மேற்கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்ட கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளது. இந்தக் கட்சி ரணில் ஜனாதிபதியாக வருவதற்கு பூரண ஆதரவு வழங்குதவாக தெரிவித்துள்ளது. மறுபுறம் இதே கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் டளஸ் அழப்பெருமவும் ஜனாதிபதி போட்டியில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பொதுஜன பெரமுன கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்சிக்குள் பசில் அணி, ஜி.எல்.பீரிஸ் அணி என இரண்டாக பிளவுபட்டுள்ளனர். பசில் அணி ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கின்றது. பீரிஸ் அணி டளஸிற்கு ஆதரவு தெரிவிக்கின்றது. இவ்வாறான நிலையில் ரணில் வெற்றி வாய்ப்பு தற்போது பெரும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
டீல் பேசும் ரணில்
இந்நிலையில் ரணில் தனது அரசியல் சாணக்கியத்தை ஆரம்பித்துள்ளார். தனது எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் வேலைத்திட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மறுபுறத்தில் காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் ரணிலுக்கு எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது. அதனை தனக்கு எவ்வாறு சாதகமாக மாற்றிக்கொள்வது என்பது தொடர்பிலும் ரணில் தன் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளார்.
ரணில் தற்போது இராணுவத்துடன் ரணில் மிகவும் நெருக்கமான உறவுகளை பேணி வருகிறார். நேற்றையதினம் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதும் இராணுவ வைத்தியசாலைக்கு சென்று அங்குள்ளவர்களை பார்வையிட்டிருந்தார்.
இராணுவத்துடன் நெருக்கமாகும் ஜனாதிபதி
இந்நிலையில் இராணுவத்தை கொண்டு ஆர்ப்பாட்ட களத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வேலைத்திட்டத்தை ரணில் கச்சிதமாய் மேற்கொண்டு வருகிறார்.
சமகாலத்தில் தென்னிலங்கை அரசியல் களத்தில் ரணிலே அடுத்த ஜனாதிபதி என்பது அழுத்தமான நிலைப்பாட்டில் உள்ளது. இதனை முறையடிக்கும் முயற்சியில் சஜித், அனுர தரப்பு ஈடுபட்டு வருகின்றது.
வன்முறைகளை தூண்டி விட்டாவது ஜனாதிபதி பதவியை கைப்பற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அனுரகுமார திசாநாயக்க உள்ளார். மறுபுறம் சஜித் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதுடன், பெட்டிகளை பறிமாறவும் இணக்கம் வெளியிட்டுள்ளார்.
வெளிநாடுகளின் தலையீடு
மறுபுறத்தில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அமெரிக்கா மற்றும் இந்தியா நாடுகள் போராடி வருகின்றன.
இரண்டு நாடுகளுடன் ரணில் மிகவும் நெருக்கமான உறவினை மேற்கொண்டு வருகிறார். இவ்வாறான நிலையில் அனைத்து விடயங்களையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு அடுத்த ஜனாதிபதி பதவியை தக்க வைத்துள்ள ரணில் பல்வேறு அரசியல் விளையாட்டுக்களை ஆரம்பித்துள்ளார்.
பொறுத்திருந்து பார்க்கலாம் அடுத்து வாரத்தில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றத்தையும் ரணிலின் அரசியல் காய்நகர்த்தல்களின் வெற்றியையும்.








































