இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனது 93 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், 2025 ஆம் ஆண்டில் 2,203 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிப் பெரும் சாதனை படைத்துள்ளது.
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கை விட 33 பில்லியன் ரூபாய் மேலதிகமாக ஈட்டப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 சதவீத அதிகரிப்பாகும் என உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக் தேவி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று (30) திணைக்களத்தின் கேட்போர் கூடத்திற்கு நேரில் சென்று ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் 93 ஆண்டுகால வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் அங்கு விஜயம் செய்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதன்போது அரசாங்கம் எதிர்பார்த்த இலக்கை விட அதிக வருமானத்தை ஈட்டிக்கொடுத்தமைக்காக திணைக்களத்தின் அனைத்து அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் ஜனாதிபதி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
அத்துடன் 2025 ஆம் ஆண்டின் முன்னேற்றம் மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.








































